Posts

Showing posts from 2018

உயிரே...

உயிரை உருவி கொடுக்கிறேன், நெஞ்சை பிளந்து காட்டுகிறேன், உள்ளே இருப்பது நீதானே, உன்னாலே நானும் வாழுகிறேன். காலம் கடந்து போகிறதே, காற்றும் உன்பெயர் சொல்லியதே, கனவில் நீ வந்து போகத்தான், கவலைகள் அனைத்தும் தொலைக்கிறேன். தனிமை என்னை கொல்லுகிறதே, கண்ணீர் நதியாய் வழிகின்றதே, துணையாக உன்னையே தேடினேன், உன் நினைவை தூவிசென்றாயே. மழையாக என்னில் பொழிந்தாயே, இந்த பாலையையும் பூக்கச்செய்தாயே, உன்னை நினைக்கும் பொழுதெல்லாம், சொர்க்கம் கண்முன் தோன்றுதடி. உன்னை சுற்றி சுற்றி வந்தேனே, சுமையையும் சுகமாய் ஏற்றேனே, உன் சொல்லில் என் வாழ்க்கையடி, நான் செத்தாலும் உனக்காக இருப்பேனடி. கனவில் உன்னை காண்பேனே, உன் நினைவை இழந்தால் இறப்பேனே, நிழலாய் உன்னை தொடர்ந்து நான், என்றும் துணையாகவே இருப்பேனே. துயிலும் எண்ணம் எனக்கில்லை, தூது அனுப்பவும் வழியில்லை, உன் கண்களை காண வருவேனே, என் காதலை பரிசாக தருவேனே. உன்னை எண்ணி எண்ண ஏங்கினேன், ஏக்கம் தாளாமல் தவிக்கிறேன், என் துயரம் துடைத்திட நீ வந்தால், தோல்விகள் தொலைத்தே தேறிடுவேன்.

என் காதலையும் கருவுறசெய்யுங்கள்.

மகரந்தம் திருடி மலரினை தாயாக்கும் தேனீக்களே, பொன்வண்டுகளே, வண்ணத்துபூச்சிகளே, என் காதலையும் திருடி என்னவளின் இதயத்திலே கருவுறசெய்யுங்களேன்.

அரசியல் அடிமைதனத்தை அடியோடுஅழித்திடுவோம்.

முட்டாள்கள் வாழும், முட்டாள்கள் ஆளும் இந்த மண்ணிலே நாமும் ஒரு முட்டாளாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த மூளையிழந்த அரசியல்வாதிகளையும், முதுகெலும்பிழந்த அரசு அதிகாரிகளையும் பற்றிப் பேசிக்கிடப்பதை விடுத்து, நம் முட்டாள்தனத்திற்கு முதலில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முட்டாள்கள் என்று தெரிந்தும் முதலுரிமை அவர்களுக்கே வழங்கும் மூடத்தனத்தை மூட்டைகட்டவேண்டும். முயன்றால் எதுவும் முடியும், இருண்டால் கட்டாயம் விடியும், நல்ல முடிவுக்காகவும் நல்ல விடிவுக்காகவும் காத்துகிடக்கின்றோம். காலத்தின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பூத்துக்கிடக்கின்றோம். பதிலை நாம் எழுதப்போகின்றோமா இல்லை காலம்  தன் பதிலை எழுதப்போகின்றதா என்பதை தெரிவு செய்யும் தருணத்தில் நிற்கின்றோம். நல்லதொரு பதிலை எழுதிடுவோம், நன்மை தரும் ஆட்சியை அமைத்திடுவோம், நாட்டை வளப்படுத்திடுவோம், நாமும் வளமுடன் வாழ்ந்திடுவோம். தமிழுடனும்,தன்மானத்துடனும் என்றும் தனிப்பெருமை பெற்று நிலைத்திடுவோம்..